Wednesday 25 May 2016

எல்லைக்கோடு- சிறுகதை



எல்லைக்கோடு    (சிறுகதை)  (09.06.2011)
                                                        

பிச்சினிக்காடு இளங்கோ

பெண்களோடு அலுவலகத்தில் வேலைசெய்யும்போது எல்லாவிதமான எண்ணங்களும் தோன்றி மறைவதற்கு காரணங்கள் உண்டு.
தோன்றாமல் இருந்தால்தான் அதிசயம்.
நம்மைப் பார்ப்பவர்கள் ஒருவித சபலத்தோடும் சலனத்தோடும்தான் பார்ப்பார்கள். அது நமக்கும் ஏற்படலாம். அது குறையில்லை.
அதுதான் இயற்கை.
அதற்காக அவ்வாறு தோன்றும் சபலங்களுக்கெல்லாம் உரிமைக்கொடுத்தும் உருவம் கொடுத்தும் பேசவிடமுடியாது.
அதற்கு ஓர் எல்லையும் உண்டு.
அலுவலகத்தில் இருக்கும் சூழல் அப்படியொரு விபத்துக்குரியாதாக இல்லை. எந்த உணர்வு ததும்பல்களும் சபலங்களும் இல்லாத ஓர் அலுவலகம். வேடிக்கைக்காகக் கூட பலவீனங்கள் கசியாத பண்புக்குரியவர்கள்.
ஒரு கேள்வி எனக்குள் இருந்துகொண்டே இருக்கும். அது என்னை உசுப்பிக்கொண்டே இருக்கும்.
சரி! நாம் எச்சரிக்கையாக இருப்போம் என்று முடிவெடுத்து நிதானமாக நடந்துகொள்ள தொடங்கினேன்.
இலக்கியம், இசை, கலை பற்றிய அவர்களுடைய பார்வை எப்படி இருக்கும் என்பது எனக்கு ஆவலான ஒன்றாக இருந்துவந்தது. என்கவிதைகளைப் படித்தார்கள். எனக்கு வரும் இலக்கிய இதழ்களைப்  படிப்பார்கள். கடிதங்களைப் பார்ப்பார்கள்.
எனக்கான தொடர்பையும் இருப்பையும் எப்படி எடைபோட்டிருக்கிறார்கள் என்பது  தெரிந்துகொள்ளவேண்டிய ஆவல் இருந்துகொண்டே இருந்தது. பொதுவான பலவீனம் நம்மைக் கவிஞனென்று பாராட்டுவார்கள், நம்மைப் புகழ்வார்கள் என்பதாகத்தான் இருக்கும்.
எனக்கென்னவோ அது இல்லைதான். எப்போதும் அந்த எண்ணம் எனக்கு  இருந்ததில்லை.
காரணம் எனக்குத்தெரியும் நான் கவிஞனென்று.
இந்த அலுவலகத்தில் அந்த எதிர்பார்ப்பு இல்லை என்பதே உண்மை.
அன்றாடம் வருவதும்போவதுமாக அலுவலக வாழ்க்கை   கழிந்துகொண்டிருந்தது.
மூன்றாண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது.
எந்தப் பாராட்டோ, விமர்சனமோ இல்லாமல் கழிந்தது என்றும் சொல்லமுடியாது.
திடீரென்று    ‘கவிஞர் சார்” என்பார்கள். “அந்தக்கவிதை நல்லா இருந்தது சார்” என்பார்கள்.  கவிதையா எழுதித்தள்ளுறீங்க. எல்லாமே கவிதைதானா?” என்றதுண்டு.
உடனே ஆச்சர்யங்கள் கண்விழிக்கும். அதிசயங்கள் நடந்ததுபோல் மனம் நெகிழ்வடையும்.
இந்த பலவீனம்கூட இல்லாமல் ஓருவன் இருந்துவிடமுடியுமா என்ன?
கணினியில் இருந்துகொண்டு கவிதையோ கட்டுரையோ எழுதிக்கொண்டிருக்கும்போது போகிறபோக்கில் “என்ன சார் கவிதையா?”
என்பார்கள். அது கிண்டலா? பாராட்டா? எதார்த்தமான விசாரிப்பா? தெரியாது. ஆனாலும் கவிதை ஆர்வத்தில்தான் கேட்கிறார்கள் என்று முடிவெடுத்தால்தான் நமக்கு மகிழ்ச்சி. மகிழ்ச்சிதான்முக்கியம்.
அதை பிறர் தந்தால் என்ன? நாமே வரவழைத்துக்கொண்டால் என்ன? பெண்கள் மூவருமே என்னைவிட இளஞர்கள். இளமையானவர்கள்.
நிச்சயமாக நம்மைவிட அவர்களிடம் இளமைக்கே உரிய துடுக்கும் துள்ளலும் அதிகம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு என்னிடம் உண்டு.
ஆனால் அது அவர்களிடம் தலைகாட்டியதில்லை.
நானே நினைத்து, நானே முடிவுசெய்யும் நிலைதான் நிலவியது.
சிலநேரங்களில் கவிதைகளைப் படிக்கக்கொடுப்பேன்.  படிப்பார்கள். திருத்தம்கூட சொல்வார்கள்.  இது கொஞ்சம் அதிகம்போல் எனக்குத்தோன்றும். வேறு உணர்வுகளைக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். என் கவிதைநூல்களைப் படிக்கத் தந்திருக்கிறேன்.
காதல் தீ என்றே ஒரு தொகுப்பு. நிச்சயமாக இளம்பெண்களான இவர்களிடத்தில் ஒரு தாக்கத்தைத் தந்திருக்கும் என்பது என் எதிர்பார்ப்பு.
இதுவரை அது தலைகாட்டவே இல்லை. எனக்கும் ஏமாற்றமில்லை. எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் இல்லாமல் இருக்கவேண்டும் என்பது அடிப்படியான கொள்கை. ஆனால் அப்பப்ப சபலம் கண்விழிக்கவேசெய்யும். சபலம் இல்லையென்றாலும் வாழ்க்கையில் ரசனையில்லை.
ரசனைக்காக சபலத்தை ஆட்டிப்படைக்க விடவும்கூடாது. இந்தத்தெளிவோடுதான் ஐம்பதைத்தாண்டியதிலிருந்து நிதானத்தோடு வாழ்கிறேன். என் எழுத்தைப்பற்றியோ, என் கவிதைகளைப்பற்றியோ எதுவும் வெளிப்படையாக  சொன்னதில்லை.
அது அவர்களுக்குப் பலம். சொல்லவில்லையே என்பதுதான் என் ஆதங்கம். சொல்லிவிடுவதால் நான் என்னசெய்யப்போகிறேன்?.
சொல்லாததால் நான் என்ன ஆகப்போகிறேன்?. எதுவுமில்லை. 
எனவே ஒரு சமநிலையான  மனவோட்டத்தில் இயங்கவும் வாழ்க்கையை இயக்கவும் கற்றுக்கொண்டேன்.
என்னோடு பழகும் இளைஞர்களுக்கு இது வியப்பு.
சிரித்துக்கொண்டே பேசி கொஞ்சம் பலவீனமாக உரையாடும்போது நான் மெளனம் சாதித்துவிடுவதால் பெருத்த ஏமாற்றம் அவர்களுக்கு. இவர்கவிஞரா?
இவருக்குக் கற்பனை உண்டா? என்றெல்லாம் சந்தேகம் ஏற்பட்டிருக்கும். என் வயது ஒத்தவர்களோடு பேசும்போது நான் வரம்பு மீறலாம். வயதுகுறைவானவர்களோடு பேசும்போது கொஞ்சம் நிதானம் தேவை. அதுவே அவர்களுக்குத் தூண்டுதலாக அமைந்துவிடும்.
என்னையே முன்னுதாரணமாகச்சொல்லிவிடுவார்கள்.
எல்லாவற்றையும் பேசிச்சிரித்த; பேசிக்களித்த; விமர்சனம் செய்துமகிழ்ந்த காலங்கள் இல்லாமலில்லை. ஒரு கதைசொல்லியைப்போல  பிறரை என்வசப்படுத்திய தருணங்கள் நினைவுக்கு வருகின்றன. நேற்றுக்கூட என் வகுப்பு நண்பரின் மகள் திருமணத்திற்கு தஞ்சாவூர் சென்று வந்தேன். வகுப்புதோழர்கள் பலரைச்சந்தித்தேன். கலகல என உரையாடினோம். மீண்டும் கல்லூரி வாழ்க்கை வந்துபோனது. கிண்டலும் கேலியும் நிரம்பிவழிந்தது. எங்களை மறந்த தருணங்கள் மகிழ்ச்சியாய் முடிந்தது.ஒவொருவரும் பணிநிறைவெய்தும் நிலைக்குவந்திருப்பதே மறந்தேபோனது.
இப்படி ,எல்லாம் கடந்துவந்துபின்னும் மனம் இளமையாகத்தான் இருக்கிறது. உடலின் ஒத்துழைப்பும் இல்லாமலில்லை.
உடலும் உள்ளமும் ஒருசேர இயங்கினாலும் நானே ஒரு வளையத்துக்குள் வாழ ஆசைப்பட்டுவிட்டேன்..
அப்படி முடிவெடுத்தப்பின் போராட்டம் எனக்கும் என் மனத்திற்கும்தான். இதை வெளிப்படையாகச்சொல்லாமல் மவுனமாக நடத்திக்கொண்டிருக்கிறேன்.
இதைச்சொல்வது நாகரிகமில்லை. அப்படிச்சொன்னால் அதற்கும் பிரசங்கத்திற்கும் வித்தியாசமில்லை.
அறிவுரையாகிவிடும்.
வாய்சொல்லவேண்டியதை என் செயல்கள் சொன்னால் திருந்துவதும் திருத்துவதும் எளிது.
என் நோக்கம் யாரையும் திருத்துவதல்ல.
நதியைப்போல செல்லவேண்டும் என்பது என் ஆசை.
அந்த ஆசையில் தொடரும் வாழ்க்கையில் இதுமாதிரியான சின்ன சின்ன எதிர்பார்ப்புகள் இல்லாமலில்லை என்பதே உண்மை.
அலுவலகப்பணியில் தீவிரமாக இருக்கும் அவர்களுக்கு இலக்கியத்தில் அவ்வளவு அக்கறையில்லை என்றுதான் நினைத்துக்கொண்டேன்.
ஒருவருக்கு திருமணமாகிவிட்டது. இருவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
நிறைய எதிர்பார்ப்புகளோடு குறைவான சம்பளத்தில் வேலைசெய்கிறார்கள்.
அவரவர்க்கும் கனவுகள் இல்லாமலில்லை.
நடந்ததை எண்ணிவருந்தியும் நடப்பது நன்றாக நடக்கவேண்டுமென்ற கரிசனமும் இருக்கிறது என்பதை உணராமலில்லை.. 
வீட்டில் வசதி இருக்கிறது.
உடனடியானத்தேவை எதுவும் இல்லை.
பெற்றோர்கள் நல்ல வசதியோடு வைத்திருக்கிறார்கள்.
அதனால்தான் என்னவோ காசுக்காக மயங்குகிற மனநிலை அவர்களுக்கு இல்லை.
தடுமாற்றமில்லா போக்கு .
அது அவர்கள்மீது ஒரு மரியாதையை வரவழைத்தது.
சிரிப்பார்கள்.
வெகுளியும் இல்லை. வினயமும் இல்லை.
பேசுவார்கள்.
ஒளிவும் இல்லை மறைவும் இல்லை.
கண்டிப்பும் கண்ணியமும் இயற்கையாக அமைந்த வாழ்க்கை அவர்களுடையது.
இவர்களிடம்போய் நாம் எதிர்பார்த்தது தவறுதான்.
அலுவலக வேலையைத்தவிர வேறு எதிர்பார்ப்புக்கு இடமில்லாமல் காலம் ஓடிக்கொண்டிருந்தது.
ஒருநாள் வாட்டத்தோடு காணப்பட்டது அந்த இளம்பெண் அகல்யாவின் முகம்... அகல்யா வெட்டொன்று துண்டிரண்டு  என்கிற வழக்கத்தில் பேசுகிற பெண் .
என்ன இப்படிப் பேசுகிறது என்று யோசிக்கத்தோன்றும்.
கொஞ்சம் யோசித்தால் அகல்யாவின் போக்கு சரியென்று தோன்றும். அலுவலகத்திற்கு காலையில் வந்ததும் யாரையும் பார்ப்பதில்லை.. வருகைப்பதிவேட்டில் கையெழுத்திடுவதையே எண்ணத்தில் சுமந்து வரும். கையெழுத்துப்போட்டும் நம்மைவிசாரிக்க மிக நேரமாகும்.
அலட்சியமாக நடந்துகொள்வதுபோல் தோன்றும்.
உண்மையில் அப்படியொரு சுபாவம் அகல்யாவிற்கு இல்லை. கொஞ்சநேரம் கழித்துத்தான் எல்லோரையும் விசாரிக்கும் மனநிலை அகல்யாவிடம் காணப்படும்.
இது அலுவலகத்தில் தொடர்கதையென்றே சொல்லவேண்டும். 
லேசாக விசாரித்தேன்.
ஏன் இன்னைக்கு இப்படி இடிஞ்சதுபோல் இருக்கிறீர்கள்” என்று பேச்சுக்கொடுத்தேன். உடனே பதில் வரவில்லை.
அகல்யா யோசித்துக்கொண்டிருபதுபோல் தெரிந்தது .
இதற்குமேல் தொடரவேண்டாம் என்று விட்டு விட்டேன்.
இலக்கிய இதழ்கள் வருகிறதே படிக்கமாட்டீர்களா?
கவிதை ரசனையெல்லாம் கிடையாதா? என்றெல்லாம் நான் கேட்கவில்லை. “ சார் நீங்கள் வெளிப்படையா எழுதுறீங்க. நாங்க அப்படி எழுதமுடியாது. வெளியில் எல்லாத்தையும் பேசமுடியல.
நானும் எழுதிக்கிட்டுத்தான் இருக்கேன். மனதில் தோன்றுவதையெல்லாம் எழுதிவைத்திருக்கிறேன். உங்கள் எழுத்தைப் படிப்பதால் ஏற்படும் தாக்கத்திற்கு ஆளாகக்கூடது என்றுதான் அதுபற்றி பேசுவதில்லை. படிப்பதோடு சரி.  அதற்குமேல் அதிகம் அக்கறை காட்டுவதில்லை.” என்று நிதானமாகப்பேசத்தொடங்கினார் அகல்யா.

வகுத்துக்கொண்ட வாழ்க்கையில் எதிர்ப்பார்ப்புகளுக்கு  இடம்கொடுக்காமல் வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
தெரிந்தோ தெரியாமலோ வாழ்க்கையை ஏற்றுக்கொண்டுவிட்டேன். யாரையும் குறைசொல்லமுடியாது.
ஏன் எனக்கு அதிகம் கோபம் வருகிறது? நான் பலவீனமாக இருக்கிறேனா?.
குழைந்தைகளை நன்றாக வளர்க்கவேண்டும்.
அவர்கள் விருப்பத்தை விருப்பம்போல் நிறைவேற்றவேண்டும். குழந்தைகளுடைய தேவையை நான் நிறைவேற்றவேண்டும்”
என்று ஆதங்கத்தை சுயமாக இறக்கிவைத்தார்.
காரணம் அகல்யாவின் பெற்றோர் நன்றாகக் குழந்தைகளைக் கவனித்துக்கொண்டாலும் தான் சம்பாதித்ததில் செய்யமுடியவில்லையே.
அந்த அளவுக்கு தன்னால் சம்பாதிக்கமுடியவில்லையே என்பதுதான் பாரமாக இருந்து வருத்திருக்கிறது.
அதன் வலிதான் அகல்யாவை நிம்மதி இழக்கவைத்திருக்கிறது.  திருமணத்தைக்கூட யோசிக்காத வயதில் செய்துவிட்டேன்..
நினைக்க நினைக்க மனம் கணப்பதுதான் மிச்சம். அதனால்தான் இலக்கியங்களில் என் ஈடுபாட்டை வெளிப்படுத்துவதில்லை.”  இப்படி அகல்யா ஒருமுறை இயல்பாகச் சொன்னதை இப்போது நினைத்துக்கொள்கிறேன்.
இலக்கியத்தை; கவிதையை விரிவாகப்பேசுவது கூட எங்கேயோ சென்று முடிகிறது என்பது தன்கருத்து என்பதைப்போல் அக்கறையைக்குறைத்துக்கொண்டு அவர் வேலையை அவர் பார்க்கத்தொடங்கிவிட்டார்.
மனதில் பாரம் இருக்கும்போது கவிதையாவது கத்தரிக்காயாவது.
எல்லாம் ஒரு பிதற்றல்தான்.
சுதந்தரமாக இலக்கியத்தை அலசும் இன்றைய முற்போக்காளர்கள் குடும்பத்தில் சிக்கலாகவும் சிக்கலான குடும்பத்தையும் கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனிக்கத்தவறவில்லை.
வரம்புக்குள் வாழ அசைப்பட்டு வம்புக்குள் சிக்காத அகல்யாவின் எல்லைக்கோடு நியாமானது.
எதிர்ப்பார்ப்பை அளவோடு வைத்திருந்ததால் குறைந்தபட்ச நிம்மதியாவது வசப்பட்டிருக்கிறது” என்ற முடிவுக்கு நாம் வரலாம்.
சுமையில்லாத மனமும் வானமும் தெளிவாகத்தான் இருக்கிறது.

   முற்றும். பிச்சினிக்காடு இளங்கோ

No comments:

Post a Comment