Monday 23 May 2016

Thirukural



 உயிர்ச்சூழலுக்கு
 வேர்
 நீர்ச்சூழல்

பிச்சினிக்காடு இளங்கோ   (சிங்கப்பூர்)15.04.2016)

உலகில்
ஒரு குரல்
உலக உயிர்களுக்கானது

அது
குறள்!
ஒரே குரல்!
திருக்குறள்தான்!.

பிறப்பொக்கும் என
பிரகடனப்படுத்திய குரல்
குறள்தான்

பிரகடனப்படுத்தியதே
குறள்தான்

எல்லா உயிர்க்கும்
வேரெது?
நீரின்றி
வேறெது?
என்றதும் குறள்தான்.

உணவுக்கு ஆதாரம்
அதுவே ஆகாரம்
நீரின்றி வேறில்லை
நீரின்றி உலகில்லை

நீரை அமிழ்தென்றும்
நீரே அமிழ்தென்றும்
நிறுவியது குறள்தான்

கார்மேகம்
மனம் கரையாவிட்டால்
பெருங்கடலும்
மனம் கலங்கும்

பொய்க்கும் மழையெனில்
தவம்
தானம்
பூசை
எல்லாம் பொய்க்கும்

எப்படி?

மழை
விழுதல் நின்றால்
நிலம்
உழுதல் நிற்கும்

நிலம் உழுதல்
நின்றால்
நிலம் பூப்பதும் காய்ப்பதும்
குன்றும்

உலகம்
உழவையே நம்பியுள்ளது
உழவும் நீரும்
ஒன்றுக்கொன்று
ஒப்பானவை

உயிர்களுக்கு
நீர்
உயிரானது

உள்ளத்தால் உயர
வெள்ளத்தோடு உயரும்
மலரைத்தான் மக்களுக்கு
குறள்
குறிப்பாய் உணர்த்தியது

பயிர்வளரும் பாத்தியில்
நீர்பாய்ச்சுதல்
இயற்கை அறிவுடையோருடன்
கற்றறிந்தார் பேசுதல்
என்று
பேசுகிறது குறள்

பொய்த்தும்
பெய்தும்
கெடுக்கும் பேராற்றல்
மழைக்கு அன்றி
எதற்கும்  இல்லை
அந்த மாசக்தி

உறவினர்
துன்பம் தருவதும்
இன்பம் தரும்
நிழலின்கீழ் உள்ள நீர்
துன்பம் தருவதும் ஒன்றாம்



அன்புடையவரிடம்
ஊடுதல்
இன்பம் தரும்
அது
நிழல்சார்ந்த நீரின்
இன்சுவை என்கிறது குறள்

நிலமும் நீரும்
இணைந்ததுபோலிருக்கும்
அன்புடையவரிடம்
ஊடுவதால்
கூடும் இன்பம்
அதுவே
கூடுதல் இன்பம்

மூவகை நீரே
நாட்டின்
மூலமாகும்
வலிய அரண்களுள்
முதன்மையாகும்
அவை
நிலத்தடி நீர்
நிலத்தின்மேல் நீர்
மழையால் மலைதரும்
ஆற்றுநீராகும்


நீரும் மலையும்
நீர்நிறை அகழியும் நிலமும்
அழகிய காடும்
அரணென்கிறது குறள்

உயிர்கள் தோன்றவும்
தோன்றிய உயிர்கள் வாழவும்
வழிகள் வகுத்தது
குறள்தான்

உலகில்
எந்த ஞானியும்
தத்துவமேதையும்
இறைத்தூதரும்
முன்மொழியாதது
நீர்ச்சூழல்தான்

அவர்கள்
வாழும் நெறிகளை
வகுத்துத்தந்திருக்கிறார்கள்
ஆனால்
‘வாழ நீர்தான் வழி’
என்றவர்கள்
வள்ளுவர்போல் யாருமில்லை

உயிர்ச்சூழலுக்கு
ஆணிவேர்
அடிப்படை
ஆதாரம்
நீர்ச்சூழலாகும்

நீர்ச்சூழல்
நிறைந்த நாடே
நிறைநாடாகும்
பிற எல்லாம்
குறைநாடாகும்

நீரின்றி
நீயுமில்லை
நானுமில்லை.

(முற்றும்) பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)

No comments:

Post a Comment