Wednesday 25 May 2016

எனக்கும் நீதான் இறைவன்



எனக்கும் இறைவன் நீ
 (27..10.2013 அன்று டேங் ரோடு முருகன் ஆலய அரங்கில் நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் பா.விஜய் முன்னிலையில் பாடப்பட்ட்து.)

பிச்சினிக்காடு இளங்கோ

கவியரசு கண்ணதாசன்
கண்மூடிய நாளில்
‘கண்ணதாசனை
திரையுலகக் கம்பன்’
என்றழைத்த பாரதிதாசனின் தாசன்
சுப்புரத்தினதாசன்  சுரதாவை
திருமறைக்காட்டில் சந்தித்தேன்

கவியரசு இழப்பைத் தாங்கமுடியாமல்
அழுதுகொண்டே அன்று
கவிதை எழுதினேன்

அழுதுஎழுதிய
கண்ணீர்க்கவிதையை
சுரதாவிடம் காண்பித்தேன்

அன்று
அழுது எழுதிய கவிதை
இன்று
என்னிடமில்லையே
என்று என்மனம் அழுகிறது

ஆனாலும்
கவியரசை நினைத்தால்
கவியெழுத முனைந்தால்
எனக்குமுன்னே என் எழுதுகோல்
துள்ளி எழுகிறது
சொல்லி அழுகிறது
சொற்களால் கோவில்கட்டி
தொழுகிறது

பிச்சிப்பூ விளையும்
பிச்சினிக்காடு நான்
பட்டுக்கோட்டைக்குப்
பக்கத்து ஊர்நான்

எதுகை மோனை
எதுவும் எண்ணாமல்
கவிதை நடைபயில
கற்றுக்கொண்டது
நாட்டுக்கொட்டையில்தான்

பள்ளிமுடித்து 
பருவமடைந்து
கல்லூரி நோக்கி
காலெடுத்து வைக்க
காத்திருந்த வேளையில்
கண்ணடித்து என்னை
கவர்ந்த பாவை யார்தெரியுமா?

கவியரசு கண்ணதாசனின்
தைப்பாவை

பாவை
பார்வை
வாலிபவயதில்
வேறென்ன தேவை?

தைப்பாவை பார்வைப்பட்டு
தைதையென குதித்தவன்நான்

தைப்பாவைக்கரம்தொட்ட
நாள்முதலாய்
கைப்பாவை ஆனவன்நான்

கண்ணதாசனின்
கைப்பாவை ஆனவன்நான்

தைப்பாவை தவிர
வெண்பாவை அறியாது
விருத்தப்பா தெரியாது
கலிப்பா வஞ்சிப்பா
கொஞ்சமும் தெரியாத என்னை
கிஞ்சிற்றும் அஞ்சாதே பாடப்பா
கவிதை படையப்பா எனச்சொன்ன
ஆசிரியப்பா கண்ணதாசன்
ஆச்சரியப்பா கண்ணதாசன்
ஆம் கண்ணதாசன்
எனக்கல்ல
எங்களுக்கு ஆசிரியரப்பா கண்ணதாசன்

கண்ணனின் தாசன் கண்ணதாசன்
காளியின்தாசன் காளிதாசன்
வாணியின்தாசன் வாணிதாசன்
கம்பதாசன் பாரதிதாசன்
பாரதியே ஷெல்லியிந்தாசன்தான்
பட்டுக்கோட்டைக்கு நான்தாசன் பகல்தாசன்
மலைக்கோட்டைக்கு இவர்தாசன்
நாட்டுக்கோட்டைக்கு யார்தாசன்?
பெரிய கேள்வி
நாட்டுக்கோட்டைக்கு யார்தாசன்?

எளிய பதில் (என்னதெரியுமா)
காதுடையோர் எல்லாம்
கண்ணதாசனின் தாசன்கள்

கவியெழுதும் மனமுடையோர் எல்லாம்
கண்ணதாசனின்  தாசன்தான்

மைய அரசு  மாநில அரசு
பேரரசு  சிற்றரசு
இப்படி எந்த அரசின் ஆணைக்கும்
கட்டுப்படாத அரசு கவியரசு
காரணம்
கவியரசு கவிதை காட்டாறு- ஒரு
கட்டுக்குள் அடங்காத பாட்டாறு

சிறுகூடல்பட்டி
வட்டியும் முதலும்
வந்துபோகும் ஒரு
கிராமியவங்கி
அந்த வங்கி வழங்கிய
வைப்புத்தொகைதான் கண்ணதாசன்
அது
சிறுதொகையல்ல
ஒரு பெரும்தொகை
தமிழுக்குக்கிடைத்த குறுந்தொகை

கண்ணதாசனை
ஒரே சொல்லில்
சொல்லிப்பார்க்கலாம்
ஒரே உவமையில்
மடிமப்படுத்தலாம்
எப்படி?

கண்ணதாசன் ஒரு
புல்லாங்குழல்

அதில் இருப்பவை
ஓட்டைகள் அல்ல
மயக்கும்
இசைக்கோட்டைகள்



           வாழ்க்கை  வேறாக
           வர்த்தை   வேறாக
           வேடங்கள் போடாத இமயம்-போலி
           வேடத்தைத் தேடாத இதயம்

          பழந்தமிழ்ப்  பாடல்களைப்
          பண்பாட்டுக் கூறுகளைத்
          தங்கத்தமிழ்ப் பாடலெனெத்  தந்தான்-மனதில்
          தங்கதமிழ்ப்  பாட்டெழுத  வந்தான்

          பாலும்  பழத்துடனே
          தேனும் கலந்ததுபோல்
          கேட்கத்  அவன்பாடல் இனிக்கும்-அது
          ஏலம்  கிராம்பைப்போல் மணக்கும்

          நேற்று ஒருகட்சி
          இன்று  ஒருகட்சி
          மாற்றத்தைத்  தத்துவம் என்றான் அந்த
          மாற்றத்தில்  பாட்டெழுதி வென்றான்

          வரவுக்கும்   செலவுக்கும்
          உறவுக்கும்  நட்புக்கும்
          பேதம்   தெரியாத  பேதை-தமிழ்
          வேதம்  கற்றுணர்ந்த மேதை

          வட்டிக்கும்  முதலுக்கும்
          பெட்டி    இருப்புக்கும்
          கணக்குப்  பார்க்காத  வள்ளல்-அவன்
          கவிதையில் குறையாது துள்ளல்

          மதுவழியும்  கிண்ணத்தில்
          மனம்வழியும் கன்னத்தில்
          பாதை போட்டுக்கொண்ட மன்னன் புது
          கீதை  நமக்களித்த கண்ணன்

         காற்றில்  கலந்திருக்கும்
         காலமெல்லாம்  வாழ்ந்திருக்கும்
         ஊற்றுக் கவியரசே எங்கே-உன்னைப்
         போற்றிப் பாடுகிறேன்  இங்கே








      காற்றெல்லாம்    நீதான்-காணும்
      திசையெல்லாம்  நீதான் நீல
      வானமும்    நீதான்  -வேணு
      கானமும்  நீதான்  -அடர்
      காட்டின்  அசைவும்  நீதான் இசைப்
      பாட்டின்    சுவையும்   நீதான்-நீ
      நிரந்தரமானவன்  அழிவதில்லை எந்த
      நிலையிலும்   உனக்கும் மரணமில்லை

   படைப்பதனால் என்பெயர்
   இறைவன் என்றாய்
   படைக்கின்ற எனக்கும் நீ
   இறைவன் ஆனாய்

நன்றி

No comments:

Post a Comment