Sunday 26 February 2012

காதல்


காதல்
 (13.02.2011  அன்று காலை 10 மணிக்கு தேவநேயப்பாவாணர் நூலகத்தில் “ காதலெனப்படுவது யாதெனில்” என்ற தலைப்பில் நடைபெற்ற கவிஓவியா கவியரங்கில் தலைமையேற்றதற்காக எழுதிய கவிதைவரிகளில் சில .22கவிஞர்கள் கலந்துகொண்டார்கள்)
பிச்சினிக்காடு இளங்கோ

காதல்
கண்ணாமூச்சி விளையாட்டா?
அல்ல
கண்ணால் மூச்சுவிடும் விளையாட்டு
சிலவேளை
மூச்சுமுட்டும் விளையாட்டு
மூர்ச்சையற்றுப்
போனவர்களும் உண்டு

காதலைப்
பொருள்சொல்லி விளக்கவா முடியும்?
காதலை
விளக்கவும்முடியாது
விலக்கவும்முடியாது

காதல்
காதல்தான்

காதல்
காதலித்து உணர்வது
காதலித்து அடைவது

கரையும் கரையும்
இதயங்களால்
கரைகாணமுடிந்தது

கரையிலே நின்றால்
காதலிக்கமுடியாது

கண்ணுக்குள் விழவேண்டும்
கண்களால் விழுங்கவேண்டும்

இமைகளின் நடனம்
இல்லாமல்
இதயங்களில் சலனம்
இல்லை
இமைகளின் நடனங்கள்
காதல் கடிதங்கள்

சபலங்கள் எல்லாம்
காதல் சாபங்கள்

காதல்
சொற்களுக்குள் வராத
சொர்க்கம்

சொல்லிவிட முடியாத
சூத்திரம்

அடமழையில் நனையும்
ஆனந்தம்

நெருப்பே எனினும்
குளிரும்
குளிரே எனினும்
கனலும்

காதல்
மலிவெனில்
கத்தரிக்காய்
அரிதெனில்
வெங்காயம்

காதல் என்பது
உயிர்
உரிமை
சுதந்தரம்
வாழ்க்கை
அது
வாழ்வதற்கே.

No comments:

Post a Comment