Sunday 26 February 2012

அணு உலை


அணு உலை
அனைவர்க்கும் உலை

பிச்சினிக்காடு இளங்கோ

என்ன நடக்கிறது
இந்நாட்டில்?

இந்நாட்டில்
எதுவும் நடப்பதுபோல்
தெரியவில்லை

அது அதுவும்
அதனதன் விருப்பம்போல்
செயல்படுகிறது

ஒரு நிழல்தரும்
கருப்புக்குடையும்                                                  
அதன் மையத்திலிருந்து விரியும்
கம்பிகளும்போல்
ஓர் அரசும்
அதன் அமைச்சும்

ஓர் அரசு
சுயமாகவும் இல்லை
சுதந்தரமாகவும் இல்லை

யாருடைய முகத்தையோ
பார்த்து நடக்கிறது;
பார்த்து நடிக்கிறது

பொறுப்பில்லாதவர்களால்
கொள்ளைபோகிறது

அணு உலை
ஆபத்து
அறிவுறுத்தப்படுகிறது

அணு அளவும்
அரசுக்கு
அக்கறை இல்லை





பாதுகாப்பற்ற நாட்டில்
பாதுகாப்பற்ற
அணு உலை ஏன்?

அணு உலையை
‘வெடிக்காத வெடிகுண்டு’ என்கிறார்
ஐராவதம் மகாதேவன்

எப்போதும் வெடிக்கலாம்
என்பது எச்சரிக்கை

வெடித்தால்
விளைவைத்தடுக்க வழியில்லை

அணு உலை
ஆபத்தென்கிறார்
மயில்வாகனன் அண்ணாதுரை

முப்பது ஆண்டுகளே
மூச்சுவிடும் ஆற்றல்
அணு உலைக்குள்ளது

அப்புறம்
என்னசெய்வதென்றே
எவருக்கும் தெரியாது

அதன்
கதிர்வீச்சின் ஆபத்து
பல்லாயிரம் ஆண்டுகளுக்குரியது

செர்நோபில் விபத்தைப்
படிக்கிறபோதே
துடிக்கிறது மனசு

அடுத்த தலைமுறையை
அணு உலையால்
அனாதையாக்குவது சரியா?









அக்கறை
எரிகிற பிரச்சனையிலும் இல்லை
எதிர்காலத்தில்
எரியப்போகிற பிரச்சனையிலும் இல்லை

இது என்ன நாடு?
இது
வேர்கள் இல்லாத
விருட்சங்களின் வீடு.

பிச்சினிக்காடு இளங்கோ



No comments:

Post a Comment