Wednesday 18 March 2015



   அவதாரம் நான்(21.12.2013)

 பிச்சினிக்காடு இளங்கோ

  என்னைப் பைத்தியம்

  என்கிறார்கள்

    
   நான் உன்
   பைத்தியம் ஆனதால்தான்
   நலமோடு வாழ்கிறேன்
   
   நாளும் பொழுதும்
   நீ மதுவாகிப்போனதால்தான்
   போதைக்கும் புகைக்கும்
   நான்  அடிமையானதில்லை

   உன்னோடு  ஓர்
   உலகம் வாய்த்ததால்தான்
   யாரோடும் எனக்கு
   பிணக்கில்லை பேதமில்லை
  
   மனம் நிறைய நீ
   நிரம்பி வழிவதால்
   மனக்குறை ஏதுமில்லை

   வருகிறவர்களெல்லாம்
   உனக்கு வணக்கம்சொல்லி
   எனக்குக் கைக்குகொடுக்கிறார்கள்
   அடிக்கடி
   உன்னைத்தான் விசாரிக்கிறார்கள்

   உன்னையும் என்னையும்
   சேர்த்தே பார்க்கிறார்கள்;
   சேர்த்தே பேசுகிறார்கள்

   உன்னிடம் பேசுவதால்
   பெருமைபெறுகிறார்கள்
   பெருமை பெறுவதற்கே
   உன்னிடம் பேசுகிறார்கள்

   உன்னை விரும்பியதால்
   எனக்கு
   ஒருகல்லில்
   ஓராயிரம் மாங்காய்கள்

   உன்னிடம்
   கரைந்துவிடுகிறேன்
   என்னிடமிருந்து
   இன்னொன்று பெறுகிறேன்
   எல்லாவற்றையும் மறந்துவிடுகிறேன்
   தனிமை எனக்கு
   வாய்த்ததில்லை
   யாரும்
   தனிமையில் என்னைப்
   பார்த்ததில்லை

   காலம் தூரம்
   கடக்கச்செய்த
   மாயம் நீ

  கவலை ஏக்கம்
  மறக்கச்செய்த
  மருந்து நீ

  வாழுந்தோறும்
  வாலிபம் வழங்கும்
  காயகல்பம் நீ

 என் வசீகரத்தின்
 அடிநாதம் நீ
 அரிதாரம் நீ
 உன்
 அவதாரம் நான்

(21.12.2013 அன்று மருமகள் சீதா சிங்கப்பூர் வந்தபோது மகன்கலைக்கோவனுடன் சென்று விமான நிலையத்திலிருந்து அழைத்துவந்து பின் வீட்டில் தூங்கியெழுந்து எழுதிய கவிதை.

No comments:

Post a Comment