Wednesday 18 March 2015



பேராசிரியர் அ.அய்யாசாமி.

 அணிந்துரை

பிச்சினிக்காடு இளங்கோவின் “அந்தநான் இல்லைநான்” கவிதைத்தொகுப்பை வாசிப்பது ஒரு சுகமான அனுபவமாக இருந்தது.
‘ஒருவரை ஒருவர் எழுதிக்கொள்கிறோம்’ என்பது கவிதை எழுதுவதைப்பற்றிய கவிதை.
“கவிதை
 என் வழியாய்த்
 தன்னை எழுதிக்கொள்கிறது
 அல்லது
 நான் கவிதைவழியாய்
 என்னை எழுதிக்கொள்கிறேன்’ என்பது சுவையான சிந்திக்கவைக்கும்,தன்னிலை வெளிப்பாடு.
எல்லாக் கலைவெளிப்பாடும் அப்படித்தானே? கலையின் மூலமாக வெளிப்படுவது கலைஞன்தானே?
ஆனால் வாழ்க்கையில் சோகம் என்னவெனில், உண்மையான கலைஞர்கள்; கவிஞர்கள் தடம்புரண்டு போவதே.
குயில்களெல்லாம் எங்கோ போய்விட வெற்றுக்காடு  தவித்துக்கொண்டிருக்கிறது ‘ஏக்கம்’ கவிதையில்.
கவிஞர்களும் சிந்தனையாளர்களும் சந்திக்கிறார்கள் சின்ன அறையில்.
அங்கே எல்லோரிடத்திலும் வெளிப்படுகிறது கோபம். ஆனால் இறுதியில்,
‘சமுகத்தைப்புரட்டும்
 வல்லமையை
 எழுத்தில் இறக்கிவிட்டுப்
 பலவீனமாகித்
 தாகம் தீர்த்துக்கொள்கிறார்கள்
 தோழமையோடு’ என்று ‘தாகம்’ என்ற கவிதையில் தன் ஆற்றாமையைத் தெரிவிக்கிறார்.
அதேசமயம் ‘வாழ்வதற்காகவே மரித்த’ முத்துக்குமாரை மனமாரப் பாராட்டுகிறார் “தீக்குமார் கவிதையில்”.
மாலை, பொன்னாடை, விருதுகள் எல்லாம் கவிஞனைத் திசைதிருப்பி விடும். என்னை விட்டுவிடுங்கள்,
‘ஒரு சுதந்தர சுவாசம்
 இப்போது
என் பயணத்திற்குத்தேவை’ என மன்றாடுகிறார்,  ‘வழிவிடுங்கள்’ கவிதையில்
‘எழுதுவது கவிதையாகிவிடுகிறது’ என்கிறது கவிதையைப்பற்றிய மீண்டும் ஒரு கவிதை.
‘கவிதையாய் எழுதுவதில்லை
 கண்ணீரை எழுதுவது
 கவிதையாகிவிடுகிறது’ என்கிறார். துயரங்களின் உறுத்தலே கவிதை என்பது காலம் காலமாக வரும் வழக்கமல்லவா?

சுவரில் தென்படும் விளம்பர எழுத்துகளைப்பார்த்து , பொருள்பொதிந்த சொற்களெல்லாம் அவற்றில் மலினமானதைப் பார்த்து,


‘வரலாற்றில் விளைந்த
 சாதனைச்சொற்கள்
 சாவியாய் விளைந்து
சாதாரணச்சுவரில்’ என்று வேதனைப்படுகிறார். ‘சாவியாய்’ என்பது அற்புதமான சொல்லாட்சி.

கவிஞர்களைப்பற்றிய ‘மாநாடு’ என்னும் கவிதை,
‘குயில்கள் கூவ
 மனிதர்கள் நிறைந்த
 தோப்புகள் போதும்
 மரங்கள் அடர்ந்த
 மாநாடு தேவையில்லை’ என்று உறுதிபடக்கூறுகிறார்.
மாநாடுகள்  கவித்துவத்தை நீர்க்கச்செய்துவிடும் என்பது இளங்கோ அவர்களின் கருத்து.
‘குயில்கள்’ என்னும் குறியீடு ‘புனைபெயரே’ என்னும் கவிதையிலும் வருகிறது.
இன்னும் தனித்த சிந்தனையுள்ள கவிஞன் வரவில்லை என்னும் ஆதங்கம் வெளிப்படுகிறது அதில். ‘தனித்தநல் கருங்குயிலைத்
                                தவமிருந்து பெறும்வரை
                                குயில்கள் என்பது
                                புனைபெயரே’ என நிறுவுகிறது அது.
‘நீ(ர்)தான்’ என்னும் கவிதை, எவ்வளவு சிறிய பொருளில் எத்தகைய பெருமையைக் காண்கிறது ! ‘ நகை செய்யுங்கள்’ கவிதையும் அதே ரகம்தான்.
‘ சேதாரம்
 செய்கூலி
 இல்லாத நகை          
 புன்னகைதான்’ என்று நிறைவுறும்போது எத்தனை அழுத்தம்!
‘கரையிலே நின்றால்
காதலிக்க முடியாது
கண்ணுக்குள் விழவேண்டும்
கண்களால் விழுங்கவேண்டும்’ என்று காதலின் இலக்கணத்தைத்      தொகுத்தளிக்கிறது ‘காதல் ‘ என்னும் கவிதை.

நடிகர்களின் பின்னே இளைஞர்கள் ஓடும் அவலம் கண்டு ‘காடு’ என்ற அருமையான தலைப்பிலமைந்த கவிதை கொந்தளிக்கிறது.
“ அவர்கள்
  கோடியைக் கொட்டியது
  கோடியை எடுக்க;
  இவர்கள்
  கோவணத்துணியில் தவிக்க” என்று பதைக்கிறார்.
  தவிப்பவர்கள் புரிந்துகொள்ளவேண்டுமே!

‘பாவி’ என்ற கவிதை அளவில் சிறியது. பொருளில் வெடிகுண்டு. பெண்களிடம்தான் என்னன்ன எதிர்பார்க்கிறோம், எப்படியெல்லாம் அவர்களை ஏமாற்றிச்சுரண்டுகிறோம்.
‘ அது அப்படித்தான் வரும்’ ‘இரகசியம்’ என்னும் கவிதைகளின் நகைச்சுவை நம்மைப் புன்னகை பூக்க வைக்கிறது.
வாகனங்களில் காணும் வாசகங்கள் பறைசாற்றுவது பக்தியையா? பேதமையையா?(முடிவு), நாற்றமிகு பண்பாடு, கவிதை அங்கதத்தைச் சூடாகவே தருகிறது.
‘ இலாபம் நட்டம்
  பார்க்கிறவர்களால்
  காலம் கர்ப்பமுற்றிருக்கிறது’  என்பதே வேதனை.
ஆனால் புண்படுமே புண்படுமே என்ற பெருந்தன்மையையும் பண்பாட்டையும் காரணம்காட்டி, எதிர்ப்புக்குரலெழுப்ப மறுக்கிறார்கள அனைவரும்.
தீமையை ஒழிக்க ஒருவரும் முன்வருவதில்லை.
“ இன்னும் பல
  நூற்றாண்டுகளுக்கு
  நிலைத்திருக்கட்டும்
  நம் நாற்றமிகு பண்பாடு’ என்று வெடிக்கிறார் ‘நாற்றமிகு பண்பாடு’ கவிதையில்.   “ பல பூச்செடிகளுக்கு
  வேராகவும்
  நீராகவும்
  ஜாடியாகவும் இருந்தீர்கள்” என்று பாலாவுக்கு அஞ்சலி செய்யும் ‘புதுக்கோட்டைதான் என் திருத்தலம் ‘ ஆழமான கையறு நிலை உணர்வைத் தெரிவிக்கிறது. வாழ்க்கையே  ஒரு முரண்சுவைதான் என்பதை உணர்த்துகிறது ‘புரிதல்”.
‘ எனக்கென்னவோ
  புரிகிறது
  புரியும் தறுவாயில்தான்
  முடிகிறது வாழ்க்கை’ என்னும் சொற்களில் காணப்படுவது அலுப்பா?  திகைப்பா?

கவிஞன் ஒவ்வொரு கணமும் செதுக்கப்படுகிறான். எனவே ஒவ்வொரு கணமும் மாறுகிறான். அந்த மாற்றத்தை உணர்வது ஒரு பெருமிதம். ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு கவிதையைத் தந்திருக்கிறது. அடுத்த கணம் வேறொரு கவிதையைத் தரும். இந்த  அரிய உண்மையை அழகாக வெளிப்படுத்துகிறது தலைப்புக்கவிதை.

சொல்லும் பொருளும் உணர்வும் சிந்தனையும் தேடலும் காணலும் இந்த நூல் நெடுகிலும் விரவி, நம் நெஞ்சத்தை வருடுகின்றன. அவ்வப்போது உறுத்துகின்றன. சில வேளைகளில் குத்தவும் செய்கின்றன. அவைதானே கவிதை வழக்கம் கவிஞனின் நோக்கம்.
பிச்சினிக்காடு இளங்கோ வாழ்க, வளர்க, உயர்க என வாழ்த்துகிறேன்.
அன்புடன்
அ. அய்யாசாமி.

முகவரி: ‘சுபத்ரா’
           நரசிம்மன் நகர்
          இராமாபுரம்
          சென்னை-600089

No comments:

Post a Comment