Monday 4 November 2013

PICHINIKKAADU ILANGO: PICHINIKKAADU ILANGO




பிச்சினிக்காடு இளங்கோ      08.08.09


எப்போதும்
எங்களோடு இருப்பது
நீயா? இறைவனா?

எப்போதும்
எங்களுக்குத் தேவை
நீயா? இறைவனா?

எங்களை வாழவைப்பது
நீயா? இறைவனா?

எங்களை இயக்குவதும்
எங்களுக்காக இயங்குவதும்
நீயா? இறைவனா?

உணவுக்கும் தொழிலுக்கும்
உறுதுணை
நீயா ? இறைவனா?

உலகு தொழவேண்டியது
உன்னையா? இறைவனையா?

நீயின்றித் தெய்வம்
உண்டா? தேவையா?

ஐயமில்லை

அய்யன் சொன்னதையே
நானும் சொல்கிறேன்
“நீதான்.நீதான்
நீர்தான்நீர்தான்”
PICHINIKKAADU ILANGO: PICHINIKKAADU ILANGO

3 comments:

  1. சொற்சிலை

    பிச்சினிக்காடு இளங்கோ

    செவிகளில் விழுந்த
    தேன்மொழிச்சொற்கள் போதும்
    உன் முகவரிசொல்ல

    சொற்களில் கரையும்
    உண்மையும் அன்பும்
    என்னையும்
    கரைக்கிறது

    கல்லாயிருந்த நான்
    கரைகிறேன் என்றால்
    சொற்களின் வலிமைதான்

    உள்ளம் வெள்ளை
    சொற்களோ வெல்லம்
    இணைந்த மலராய்த்
    தெரிகிறாய் செவிகளில்

    உன்சொல்லோடு
    வருகிறதே ஒரு சுகம்
    அது
    உன் சுவாசம்.

    அதை
    எத்தனை
    யுகங்களையிழந்தும் பெறுவதில்லை

    உன்
    கடமையும் பொறுப்பும்
    ஈர்ப்பும் ஈடுபாடும்
    என்னைத்
    தலைவணங்கவைக்கிறது

    நிமிர்ந்துபேச
    என்னிடம் எதுவுமில்லை
    உன்னைப்போல்

    உன்னைத்தவிர
    ஒரு தகுதியுமில்லை
    என்னை
    உயர்த்திக்கொள்ள

    சரணும் ஆகலாம்
    முரணும் ஆகலாம்
    எனக்கென்னவோ
    சரணே தரும் சாந்தியை


    (03.04.2012 பிற்பகல் 3--4 மணி)

    ReplyDelete
  2. கரையாக் காகங்கள்

    பிச்சினிக்காடு இளங்கோ


    குரலெடுக்கத் தெரியாத
    காகங்கள்

    கண்ணெதிரே இருந்தும்
    காணாததைக் கதைக்கும்
    மனப்பிறழ்வு கேண்மைகள்

    ஆரோக்கியத்தின்
    தளமோ தலமோ
    அல்ல அது

    குன்றேறிப் பார்க்கக்
    குதிக்கும்
    கொதிக்கும்
    இயலாமை வடிவங்கள்

    அளவளாவி
    ஆவிப்போகிறது

    மனவழுத்தம்
    மனவருத்தம் கூடி
    கூவி
    வெறுமையாய்க் கலைகிறது

    இருளடர்ந்த வட்டத்தில்
    ஒளிஒலியை
    ஒருசேரப் புதைத்துவிட்டு
    நடக்கிறது நாடகம்
    நாளும்

    (29.10.2013 அன்று மாலை 5மணிக்கு தமிழ்வள்ளல் நாகை தங்கராசு அலுவலகத்தில் எழுதியது

    ReplyDelete
  3. காதல்
    (13.02.2011)
    பிச்சினிக்காடு இளங்கோ

    காதல்
    தீமிதியலில்
    கண்வைக்காத நாத்திகர்கள்
    இல்லை

    காதல்
    பொதுவுடைமைக்கட்சியில்
    உறுப்பினராகாத
    முதலாளிகள் இல்லை

    மதம் சாதி
    காதலர்களைத்
    தண்டித்திருக்கலாம்
    கண்டித்திருக்கலாம்
    தடுக்கமுடிந்ததில்லை

    காதலர்கள்
    தோற்றிருக்கிறார்கள்
    தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்
    காதல்
    தோற்றதே இல்லை

    காதல்
    எல்லார்க்குமான
    சமரச சன்மார்க்கம்

    தேடுதுறை
    கூடுதுறை
    ஓடுதுறை
    வாடுதுறை
    பாடுதுறைதான் காதல்துறை

    காதல்துறையில்
    கவனம் தவிர்ப்போம்
    துறைதோறும் துறைதோறும்
    காதல் செய்வோம்

    சிகரங்கள் தொடுவோம்
    சாதனைபடைப்போம்
    சரித்திரமாவோம்

    ReplyDelete