Monday 4 November 2013

photo



    சந்தனம்போல் கமழவைத்துக் காட்டு

      பிச்சினிக்காடு இளங்கோ

  
  சந்தமென்றும் சிந்துஎன்றும்
  சங்கதிகள்   தெரியாமல்
  சத்தமிட்டுப் பேசுகிறான் பேச்சு-அது
  சரக்கில்லா வெத்துவேட்டு ஆச்சு

  பந்தமென்றும் சொந்தமென்றும்
  பங்கிமிலா நண்பரென்றும்
  கொண்டாடும் மனநிலையை விட்டு-அவன்
  குண்டரெனக் காட்டுகிறான் மட்டு

  வண்டாடும் சோலையிலும்
  செண்டாடும் மாலையிலும்
  கொண்டாடும் புள்ளினமாய் மாறு-அதில்
  திண்டாடும் மனநிலையே வேறு

  சிந்தனைத்தேன்  ஊறுவதை
  சிந்தித்தே  மாறுவதை
  சந்தனம்போல் கமழவைத்துக் காட்டு-அதுவே
  சந்ததியை மகிழவைக்கும் பாட்டு

  போதிமரம் சேதிதரும்
  சோதியென நீதிதரும்
  வேதமெனும் மந்திரம்போல் பாடு-சூது
  பேதமெனும்  தந்திரத்தைச் சாடு

 மானுடத்தைப் பாடுகிற
 மாந்தரினம்  தேடுகிற
 ஞானமது பாட்டினிலே வேண்டும்-தமிழ்த்
 தேனமது பருகிடவே மீண்டும்

No comments:

Post a Comment