Saturday 11 January 2014

பிச்சிப்பூ மணக்கும் பிச்சினிக்காடு



பிச்சிப்பூ மணக்கும் பிச்சினிக்காடு.( 11.03.2011)

    பிச்சினிக்காடு இளங்கோ

பிச்சினிக்காடு என்பது பேரூராட்சியோ, ஊராட்சியோ அல்ல.
அது ஒரு குக்கிராமம். என்னுடைய முதல் நூலான “வியர்வைத்தாவரங்கள்” கவிதை நூலில் பராக்கிரமம் மிக்க அத்திவெட்டிக் கிராமத்தின் ‘கைக்குடங்கை’ என்று எழுதியிருந்தேன். ஒரு குக்கிராமம் என்பதைத்தான்(ஹாம்லெட்) கைக்குடங்கை என்று குறிப்பிட்டிருந்தேன். படித்த வைகோ குலுங்கிசிரித்தார்.ஆம் அத்திவெட்டிதான் தாய்க்கிராமம். அது தஞ்சைமாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர் ஒன்றியத்தைச்சேர்ந்தது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஜமீன் கிராமங்களில் அத்திவெட்டியும் ஒன்று. அத்திவெட்டிக்குக் கிழக்கே கல்யாண ஓடை, ஒதியடிக்காடு,கிருஷ்ணாபுரம்,பழவேரிக்காடு கிராமங்கள் உள்ளன. வடக்கே சிரமேல்குடி,இளங்காடு, வாடியக்காடு கிராமங்கள் உள்ளன. அத்திவெட்டியில் மறவர்காடு,கோவில்காடு,சிவிகாடு,பூசாரிக்காடு, பிச்சினிக்காடு என குக்கிராமங்கள் உண்டு. ஆனால் அத்திவெட்டி, காந்திநகர், வடக்குக்காடு, தெற்குக்காடு,மழவன்காடு,வாண்டையன்காடு, சாளுவன்காடு,மத்தங்காடு எனத்தெருக்களை உள்ளடக்கியது. அத்திவெட்டிக் கிராமத்தில் பெரியசாமி அல்லது பெரிச்சியப்பசாமி,வைரவசாமி என்ற புகழ்பெற்ற தெய்வங்களுக்குக் காடுகள் உள்ளன. இரண்டுதெய்வங்களும் காட்டுக்குள்தான் இருக்கின்றன. அதை வழிபட தாரை எனப்படும் பாதையின் வழியாகத்தான் செல்லவேண்டும். மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் வந்துசெல்கிறார்கள். அத்திவெட்டியில் நூற்றாண்டுகள் பழமையான சிவன்கோவில் உள்ளது.சிதலமடைந்த நிலையில் உள்ளது. அதற்கு நிலங்கள் உண்டு. அறங்காவலர்குழுவும் உண்டு. அரசு தலையிட்டு புதுப்பித்து குடமுழுக்கு செய்தால் நல்லது.
அத்திவெட்டியில் இருக்கின்ற  தெய்வங்கள் அருள்மிகு ஆனந்தவல்லியம்மன், ஆதியப்பசாமி, வீரனார்,  அளவியாளம்மன், பிள்ளையார்,பைரவர், ஆயிமார்,மின்னடியான் என அழைக்கப்படுகின்றன.
            சித்திரையில்விழா
சித்திரை மாதத்தில் ஆனந்தவல்லி அம்மனுக்குத் திருவிழா.  பிச்சினிக்காட்டிலிருந்து காவடியெடுத்து கும்மிக்கொட்டிக்கொண்டு செல்வோம். திருவிழாவையடுத்து இரண்டுநாள் இரவும் நாடகம் நடைபெறும்.திங்கள் கிழமை அத்திவெட்டியில் மஞ்சத்தண்ணி விளையாட்டு. இந்தத் திருவிழாவுக்காக சிங்கப்பூரிலிருக்கும் மற்றும் பல நாடுகளிலிருக்கும் அத்திவெட்டிக்காரர்கள் ஊருக்குவந்துவிடுவார்கள்.
       முடி இறக்குதல்
அதுபோலவே வைரவசாமிக்காடு பிச்சினிக்காட்டிற்கு தென்கிழக்கே இருக்கிறது. அங்கே அழகா அமைந்திருக்கும் சாமந்திக்குளக்கரையில் வைரவசாமி(பைரவர்) ஆயிமாரு, முருகன் ஆலயம் இருக்கிறது. பைரவர் காட்டுக்குள்ளும் இருக்கிறார். இந்தக்காட்டில் பானாப்பழம் கிடைக்கும். அதைப் பறிப்பதற்காக சின்னவயதில் உள்ளே சென்று பழம்பறித்துவருவதுண்டு. அங்கே கிடைக்கும் முக்கியப்பழங்கள் பானாப்பழம்,களாக்கா பழம், தொரட்டிப்பழம், நாவல்பழம்.  நாவல்பழம் பறிக்க ஆனடிக்கொண்டலுக்குச் செல்வோம்.
நரிக்கொண்டல் என்ற இடத்தில் பானாப்பழம் நிறைய கிடைக்கும்.வைரவசாமிக்காட்டிற்குத்தெற்கே நெடுங்குளம் என்ற ஏரி உள்ளது.அத்திவெட்டியில் வடக்கே வீரையன் குளம் உண்டு.
பிச்சினிக்காட்டிற்குக் கிழக்கே பாலகுளம் இருக்கிறது. அதுவும் ஒருகாலத்தில் காட்டுக்குள் இருந்தது. அங்கே மின்னடியான் என்கிற தெய்வம் இருக்கிறது. ஆடாசெக்கு என்ற காட்டுப்பகுதியும் இருக்கிறது. அது சிவன் தலம். கார்த்திகை மாதத்தில் திங்கக்கிழமை சோமாவாரத்தன்று குழந்தைகளுக்கு முடி இறக்குவது ஒரு முக்கிய நிகழ்ச்சி. பக்கத்துக்கிராமங்களிலிருந்தெல்லாம் முடியிறக்க வருவார்கள். குழந்தைபிறந்தால் தலைமுடி அதாவது முதல்முடி வைரவசாமிக்குத்தான். ஊரில் ஆண்களுக்கு வைரப்பன், வைரக்கண்ணு,வைரம் என்றும் பெண்களுக்கு வைரம்பாள்,வைரச்செல்வி என்றும் வைரஎன்று தொடங்கும் பெயர்களை வைப்பார்கள். குறிப்பாகத் தாமரன்கோட்டை கிராமத்தைச்சேர்ந்தவர்கள் அதிகம் வருவார்கள். அதிக பக்தி அவர்களுக்குண்டு.  பிச்சினிக்காட்டிற்குத்தெற்கே பூசாரிக்காடு. பூசாரிகள் வாழ்வதால் அது பூசரிக்காடு.பிச்சினிக்காட்டிற்கும் பூசரிக்காட்டிற்கும் இடையில் சின்னகோவில்காடு,கிழவித்தோப்பு இருக்கின்றன.பிச்சினிக்காட்டிற்கு வடக்கே தெற்குவாட்டாகுடி. பிச்சினிக்காட்டிற்குத் தெற்கே தாமரன்கோட்டை. இடையில் பாட்டுவனாச்சியாறு எனும் காட்டாறு ஓடுகிறது. மழைக்காலங்களில் வெள்ளத்தால் ஆறு நிரம்பிஓடும்.போக்குவரத்து பாதிக்கும்.
         போர்க்காய்
தைமாதத்தில் கொண்டாடப்படும் பொங்கல்விழாவில் காணும்பொங்கலன்று (எங்களூரில் கன்னிப்பொங்கல் என்றுதான் சொல்வோம்.) பிச்சினிக்காட்டுப்பெண்களெல்லாம் குறிப்பாக இளம்பெண்கள் கரும்பு,வாழை மற்றும் உணவுவகைகளை எடுத்துக்கொண்டு பாட்டுவனாச்சியாறுக்குச்சென்று கும்மிகொட்டி விளையாடுவதுண்டு.
இளைஞர்கள் நாங்கள் போர்க்காய் அடித்து விளையாடுவோம்.அதாவது தேங்காயும் தேங்காயும் மோதுதல். யார்காய் உடையாமல் இருக்கிறதோ அதுதான் வெற்றிபெற்ற தேங்காய். ஒருவர் தன் தேங்காயை தரையில்வைத்து விட்டுக்கொடுப்பார். இன்னொருவர் தன் தேங்காயால் தரையிலிருக்கும் தேங்காயின்மீது மோதுவார். யார்காய் உடைகிறதோ அவர் தோற்றார். முதலில் விட்டுகொடுத்தவருக்கு அடுத்தவர் விட்டுக்கொடுக்கவேண்டும். இப்படி பிச்சினிக்காட்டிலிருந்து சிறுவர்கள் போர்க்காய் அடித்துகொண்டே பாட்டுவனாச்சியாறுவரை செல்வோம். அதிகமானத் தேங்காயை உடைக்கும் தேங்காய்க்கு கிராக்கி அதாவது demand அதிகம். அதுதான் சிறந்த போர்க்காய். ஆண்டுதோறும் போர்க்காய் விளையாட்டில் கலந்துகொள்வதற்காகவே எந்தத் தென்னையில் போர்க்காய் இருக்கிறது என்பதை அடையாளங்கண்டு வைத்திருப்போம். அதைப் போர்க்காய் மரம் என்றே அழைப்போம். இந்த விளையாட்டு தஞ்சை மாவட்டத்தில் எங்கள் பிச்சினிக்காட்டில்தான்  உண்டு.பிச்சினிக்காட்டின் சிறப்புகளுள் இதுவும் ஒன்று.   பாட்டுவனாச்சியாறில் நிறைய மணல்மேடு இருக்கும். அங்கேதான் பெண்கள் கும்மி கொட்டுவார்கள். கும்மி முடிந்ததும் உணவுண்டு திரும்புவோம். நாங்களெல்லாம் அந்த ஆற்றிலோடும் நீரில் குளித்துவிளையாடுவோம்.
இன்று ஆற்றில் மணலில்லை. வெறுங்கோரைகள் முளைத்து ஆற்றின் அழகை அபகரித்துக்கொண்டன. தண்ணியும் ஓடுவதில்லை.
        மொளைக்கொட்டு மாரியம்மன்.
பிச்சினிக்காட்டில் இருக்கும் அருள்மிகு மொளைக்கொட்டு மாரியம்மனை
சக்திவாய்ந்த அம்மனாக மக்கள் கருதுகிறார்கள். ஆண்டுதோறும் மூன்றுமுறை முளைப்பாரிபோட்டு  கும்மிகொட்டி முளையைப்பறித்து பிச்சினிக்குளத்தில் விடுவார்கள். சிறுவர்கள் அதை எடுத்து தங்களிடையே ஒருவரையொருவர் அடித்துவிளையாடுவது வழக்கம்.
புதன் கிழமை மாலையில்  முளைப்பாரி போடுவார்கள். இரவு முளைக்கு தண்ணிர் கொடுப்பார்கள். முளைபோட்ட நாளிலிருந்து வீடு மிகச்சுத்தமாக இருக்கவேண்டும். ஒவ்வொருவரின் உள்ளமும் சுத்தமாக இருக்கவேண்டும். முளைப்போட்ட வீடென்றால் அங்கே இல்லமும் உள்ளமும் சுத்தம் என்றுபொருள். காலையிலும் இரவிலும் முளைக்கு தண்ணீர் விடுவது முறை. புதன்,வியாழன்,வெள்ளி இரவுகளில் மாரியம்மன் கோவிலில் ஆண்கள் கும்மிகொட்டுவார்கள். பெண்களும் கொட்டுவார்கள்.சனிக்கிழமை தங்குமுளை. அன்றைக்குமட்டும் இரவில் கும்மி கொட்டுவதில்லை.கோவிலுக்கும் வருவதில்லை. ஞாயிறு இரவு கும்மிகொட்டி திங்கள் மாலையில் முளைக்கொட்டு முடியும். திங்கள் பகலில் கும்மிகொட்டுவோம். இருபது ஆண்டுகளுக்குமுன்பு முளைக்கொட்டு மாரியம்மன் ஒரு பூவரசமரத்தடியில்தான் இருந்தது. பின்பு ஊர்கூடிமுடிவெடுத்து பெரிய ஆலயமாகக்கட்டி குடமுழுக்கு நடத்தினோம். அடுத்தகுடமுழுக்கு வருமாண்டில் நடத்த இருக்கிறோம். பக்கத்தில் ஒரூ ஆலமரமும் இருந்தது. அங்கேதான் ஊர்கூடி பஞ்சாயத்துப்பேசுவோம். கோவில்கட்டியதால் ஆலமரத்தைவெட்டிவிட்டோம். அதற்குப்பதிலாக இன்று இரண்டு பெரிய ஆலமரங்கள் ஆலயத்தின்முன்னே தோன்றி அருமையான நிழலை வழங்கிவருகின்றன. அரசமரமும் இருக்கிறது. நிழல்தரும் சோலையாக அந்த இடம் ஆகியிருக்கிறது.மூன்றுமுறை முளைப்போடுதல் வழக்கம். கடைசிமுளை ஆனந்தவல்லி அம்மனுக்கு எடுக்கும் திருவிழாவையொட்டி போடப்படும்.ஞாயிறு திருவிழா ஆனந்தவல்லி அம்மனுக்கு. திங்கள் முளைக்கொட்டுவிழா. கும்மிக்கொட்டுதல் தஞ்சைமாவட்டத்தில் பிச்சினிக்காட்டில்தான் உண்டு.எழுவகையான கும்மியுண்டு. இன்றைக்கும் நான் கும்மிகொட்டுவது உண்டு. பெண்களும் கும்மிக்கொட்டுவார்கள். திருவிழா விருந்தே கும்மிதான். இன்று தஞ்சைமாவட்டத்தில் எந்தக்கிராமத்திலும் கும்மி இல்லை.ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் கஞ்சிக்காய்ச்சுவார்கள்.
அந்தக்கஞ்சியை பனைஒலையால்செய்யப்பட்ட மட்டையில்தான் எல்லோரும் குடிப்போம். அதன் சுவை அலாதியானது.சர்க்கரை கஞ்சியும் உண்டு.

பிச்சினிக்காட்டில் இருக்கும் இன்னொரு அம்மன் அளவியாளம்மன். அங்கே ஆண்டுதோறும் ஆடிமாத்தில் பொங்கல்வைப்பார்கள். அங்கே தூண்டில்கரனும் மின்னடியானும் அங்குண்டு..
பிச்சினிக்குளம், கானோடை,செவந்தான்,பிடாரிக்குளம்,வலையன்குளம்,புதுக்குளம்,பாலகுளம், எல்லாம் நீர்நிலைகள்.
நாட்டுவாய்க்கால் என்பது வடிகால். வாணியவயல்காடு,சாளுவன்காடு,ஆவுடையான்காடு,பள்ளமுட்டிக்காடு,கிழவித்தோப்பு, சின்னகோவில்காடு,பூசாரிக்காடு என்பதெல்லாம் பிச்சினிக்காட்டின் சில நிலப்பகுதிகள்.
                    காந்திமழவர்
 பிச்சினிக்காட்டில் பிறந்த சுதந்தர போராட்டத்தியாகி மறைந்த பெரியதம்பிமழவராயர். அவரைக் காந்திமழவர் என்றுதான் எல்லோரும் அழைபார்கள்.அவர் என்தாய்க்கு சித்தப்பா ஆவார். மிகவும் வைராக்கியமிக்கவர். அவருக்குத் தேசம்தான் உயிர். காவி நிற கதர் வேஷ்டியும் கதர் குள்ளாயும் அணிந்திருப்பர். தேசப்பிரச்சனை எதுவென்றாலும் அதற்காக விரலை வெட்டிக்கொண்டவர். வாக்குறுதியைக்காப்பாற்ற விரலை வெட்டிக்கொள்வாராம். இடது கையில் நான்குவிரல்கள் இல்லை.வெவ்வேறு தேசியக்காரணங்களுக்காக வெவ்வேறு தருணங்களில் விரல்களை வெட்டிக்கொண்டவர். சமபந்தி போஜனம் நடத்திகாட்டியவர். பள்ளியில் நுழைந்தால் நாங்களெல்லாம் வந்தே மாதரம் சொல்லவேண்டும். இது வழக்கமாக இருந்தது. எனக்கு விவரம் தெரியும்வரை அவரைத்தான் மகாத்மா காந்தி என்று நினைத்திருந்தோம்; சொல்லிவந்தோம்.பின்புதான் தெரிந்தது அவர் உள்ளூர் (பிச்சினிக்காடு) காந்தியென்று.
                    INDIAN PITTA
இது ஒரு வண்ணப்பறவை. எட்டுவண்ணத்தாலானது. உட்புறம் வால்பகுதி சிவப்பாக அழகாக இருக்கும். எங்களூரில் அதைக் காச்சுள் என்றுதான் சொல்லுவோம். அதை பிடிப்பது வில்லால் அடிப்பது எங்களூர் சிறுவர்களின் விளையாட்டு. இது கார்த்திகை மாதம் முழுவதும் நடக்கும். கண்ணிவைத்தும் பிடிப்பார்கள். கொய்..கொய் என்றுதான் சத்தம்போடும்.ஒரு அழகிய பறவை. அதைப்பற்றி பலகதைகள் உண்டு. என்னுடைய “இரவின் நரை” கவிதை நூலில் முதல் பக்கத்தில் அதன் படத்தை அச்சிட்டிருக்கிறேன். ஊரில் காடு இருக்கிறது.  காட்டில் பிச்சிப்பூ இருக்கிறது.பிச்சினிக்குளம் என்ற குளமும் இருக்கிறது. இரண்டையும் சேர்த்து பிச்சினிக்காடு என்று பெயர் வந்துவிட்டது. பட்டுக்கோட்டையில் புலவர் . தங்கவேலனார் மகன் பேராசிரியர் அ.த. பன்னீர்செலவம் அவர்கள்
எங்களூரில் இருக்கும் நீர்வளம், காடுவளம் அறிந்து “ பூஞ்சுனைக்காடு” என்பதுதான் மருவி பிச்சினிக்காடு ஆகிவிட்டது என்று கூறினார்.



        பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

பிச்சினிக்காட்டிற்கும் செங்கப்படுத்தான் காட்டிற்கும் நன்கு கி.மீ.தூரம். அங்கேதான் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்தார். தென்கிழக்கே பரக்கலக்கோட்டை உள்ளது.அங்கே பிரசித்திப்பெற்ற பொதுஆவுடையார் கோவில் உள்ளது. கார்த்திகைமாத சோமாவாரம் இங்கு சிறப்பு..தஞ்சைமாவட்டத்தின் பலபகுதிகளிலிருந்து பக்தர்கள் வருவார்கள். பிச்சினிக்காட்டிற்கு மேற்கே மன்னன்காடு,காசாங்காடு என்ற பெரிய கிராமங்கள் இருக்கின்றன. பிச்சினிக்காட்டு இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் உடையவர்கள். கால்பந்தை கீழே விடாமல் தட்டும் கலையைக்கற்ற இளைஞர் குமரவேல் இந்திய அளவில் விருதும் பெறிருக்கிறார்..
. “காடுகள் இருப்பின் நாடுகள் செழிக்கும்’ என்பதற்கு எங்களூர் ஓர் எடுத்துக்காட்டு. பிச்சினிக்காட்டில்தான் நான் பிறந்தேன் .நான் ஒரு   வேளாண்மைப்பட்டதாரி.இதுவரை ஒன்பது கவிதை நூல்களும் மூன்று கட்டுரை நூல்களும் எழுதியிருக்கிறேன். ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய animal farm நாவலை தமிழில் நாடகமாக்கி அரங்கேற்றியிருக்கிறோம். “பதிவதி ஒரு காதல்” கவிதை நாடகம் எழுதி அரங்கேற்றியிருக்கிறோம்.
தமிழக அரசிலும் அகில இந்திய வானொலியிலும் சிங்கப்பூர் ஒலிபரப்புக்கழகத்திலும்  பணியாற்றினேன். சிங்கப்பூரில் சிங்கைச்சுடர் மாத இதழின் ஒற்றை ஆசிரியாகப்பணியாற்றினேன். சிங்கப்பூரில் ஆட்சிமொழிகளுள் ஒன்றாக  தமிழ் இருப்பதால் சிங்கைச்சுடரின் முழக்கவரியாக “ தமிழ்தான் தமிழரின் முகவரி” என்ற வாசகத்தை உருவாக்கினேன். இப்போதும் என் வாகனத்தில் “தமிழ்தான் தமிழரின் முகவரி” என்ற வாசகத்தைப் பார்க்கலாம். எங்கிருந்தாலும் நான் பிச்சினிக்காடு இளங்கோ.

4 comments:

  1. அத்திவெட்டி ஜமீன் பற்றிய குறிப்புகள் தேவை! உங்களிடம் கிடைக்குமா?

    ReplyDelete
  2. அத்திவெட்டி ஜமீன் பற்றிய குறிப்புகள் தேவை! உங்களிடம் கிடைக்குமா?

    ReplyDelete
  3. அத்திவெட்டி ஜமீன் பற்றிய குறிப்புகள் தேவை! உங்களிடம் கிடைக்குமா?

    ReplyDelete
  4. அத்திவெட்டி ஜமீன் பற்றிய குறிப்புகள் தேவை! உங்களிடம் கிடைக்குமா?

    ReplyDelete